Thursday, 29 May 2014

http://vimarisanam.wordpress.com/2014/05/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/#comment-6698

vimarisanam - kavirimainthan says:
நண்பர்களுக்கு,
சிலர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
என்பது அவர்களது பின்னூட்டங்களின் மூலம் தெரிய
வருகிறது. அநேகமாக இவர்கள் பாஜகவின் அனுதாபிகள்
என்றும் புரிகிறது.
நான் ஏற்கெனவே பலமுறை இந்த வலைத்தளத்தில்
தெளிவு படுத்தி விட்டேன். நான் எந்த கட்சியைச்
சேர்ந்தவனும் அல்ல.எந்த கட்சியின் அனுதாபியும் அல்ல.
அதே போல், பாஜகவுக்கோ, நரேந்திர மோடிக்கோ எதிரானவனும் அல்ல.
நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டபோது இதே
வலைத்தளத்தில் வரவேற்று வாழ்த்துக் கூறி இருந்தேனே.
நான் எழுதும் ஒவ்வொரு இடுகையும், அந்த குறிப்பிட்ட
விஷயத்தைக் குறித்தது மட்டும் தான்.
என் மனதிற்கு சரி என்று தோன்றுவதை ஏற்றுக்கொள்கிறேன். தவறு என்று சொல்வதை கண்டித்து
எழுதுகிறேன். என் நிலை, என் கருத்து தவறு என்று
சிலருக்குத் தோன்றலாம். அது இயற்கை. ஆனால், என்னைப் பொருத்த வரை என் மனசாட்சி சொல்வதைத்தான் நான் செய்கிறேன். என் கருத்தை ஏற்காதவர்களை
நான் எந்தவிதத்திலும் குறை காணவில்லை – அது
அவர்கள் நிலை…அவ்வளவே.
பாஜகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அதே போல் எதிர்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.
நாளையோ, மறுநாளோ மோடி அவர்களைப் பாராட்டியும்
நான் எழுதக்கூடிய சந்தர்ப்பம் வரும். அப்போது
தயங்காமல் பாராட்டியும் எழுதுவேன். எனவே இதை
யாருக்கும் எதிராக என்று எடுத்துக் கொள்ளாமல்,
குறிப்பிட்ட நிகழ்வுக்காக என்று தான் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு, திருமதி சோனியா
காந்தி அவர்களின் தனிப்பட்ட விரோதம் காரணமாக
மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு மூலமாக
பெருத்த துரோகமும், கொடுமையும் இழைக்கப்பட்டது.
அவர்களுக்கு ஏற்பட்டது ஈடு செய்ய முடியாத இழப்பு.
ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் வீடிழந்தனர். பிழைப்பு இழந்தனர்.
கணவர்களை, மனைவிகளை, குழந்தைகளை
இழந்தனர். சொல்லொணாத்துயர்களுக்கு உள்ளாகினர்.
இனியாவது அவர்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும்,
சுதந்திரமாகவும் வாழ வேண்டும்.
ராஜபக்சே ஒரு கொலைகாரன். அவன் ஆட்சியில்
தமிழர்களுக்கு நிம்மதியோ, நியாயமோ கிடைக்காது.
ஐ.நா.சபையில் ஏற்கெனவே பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்துவது குறித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விசாரணை உருப்படியாக நடைபெற
இந்திய அரசு துணை புரிய வேண்டும். வடக்கே மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்பட,
அதற்கு உண்மையான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும் என்றும்
ராஜபக்சேயை இந்திய அரசு கைது செய்ய வேண்டும்
என்றும் விரும்புகிறீர்களா என்று ஒரு நண்பர் தனது
பின்னூட்டத்தில் வினவியுள்ளார். செய்தியை ஊன்றிப்
படிக்காமல், வரலாற்றுப் பின்னணியை அறியாமல் கேட்கப்படும் கேள்வி இது.
இந்திய அரசு எது நியாயம் என்று பாரபட்சமின்றி யோசித்து,
நியாயத்திற்கு துணை நின்றால் போதும். மற்றவை
எது நடக்கவேண்டுமோ அது தானாகவே நடக்கும்.
இலங்கை விஷயத்தில், காங்கிரஸ் அரசு பின்பற்றிய
அதே கொள்கையை பாஜக அரசும் பின்பற்ற வேண்டிய
அவசியம் ஏதும் இல்லை.
இந்த குறிப்பிட்ட இடுகைக்கான காரணம் -
ராஜபக்சேவை இந்திய அரசு பதவியேற்பு விழாவிற்கு அழைத்தது ஒரு தவறான முடிவு என்பதை வலியுறுத்தவே.
நான் எதிர்பார்ப்பது, இனியாவது பாஜக அரசு -
இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் அரசு சென்ற
அதே வழியில் செல்லாமல், நியாயத்தின் பக்கம்
நிற்க வேண்டும். பாரதத்தின் இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில் தேவையான மாற்றங்களை
மேற்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யத் தேவையான
சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு பன்னாட்டு சட்டங்களில் வழி இருக்கிறது.
இது இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மட்டுமின்றி,
தமிழக மீனவர்களின் நலன்களுக்காகவும்,
இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகவும் அவசியமான
ஒன்று.
கூடுமான வரை எனக்கான நியாயங்களை, காரணங்களை -
விளக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இதன் மீதும் உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

No comments:

Post a Comment